அன்று மஹிந்தவின் அரசாங்கத்திலே கூட்டமைப்பு இணைந்திருந்தால்முன்னாள் போராளிகள் இன்று சிறையில் இருந்திருக்கவே மாட்டார்கள்.

138 Views

மஹிந்தவின் அரசாங்கத்திலே அன்று கூட்டமைப்பு இணைந்திருந்தால்
முன்னாள் போராளிகள் இன்று சிறையில் இருந்திருக்கவே மாட்டார்கள்

  • அடித்து கூறுகின்றார் கிழக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினர் பாரதி

(எஸ்.அஷ்ரப்கான்)

2018 ஆம் ஆண்டு பிரதமராக மஹிந்த ராஜபக்ஸ பதவி வகித்த 52 நாள் அரசாங்கத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பு இணைந்து இருந்தால் சிறைச்சாலைகளில் அடைத்து வைக்கப்பட்டு இருக்கின்ற முன்னாள் போராளிகளின் விடுதலை நிச்சயமாக அப்போதே இடம்பெற்று இருக்கும் என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் அந்நாள் இணைப்பாளரும், கிழக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினருமான இனியபாரதி தெரிவித்தார்.

காரைதீவுக்கு விஜயம் மேற்கொண்டு வந்த இவர் நேற்று புதன்கிழமை ஊடகவியலாளர்களை சந்தித்து அரசியல் நடப்புகள் தொடர்பாக பேசியபோது மேலும் தெரிவித்தவை வருமாறு

ஜனாதிபதி கோதாபய ராஜபக்ஸ, பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ ஆகியோருடன் பேசி தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வுகளை பெற்று கொள்ள முடியும். ஆனால் அதற்கு பொருத்தமான தலைமைத்துவம் தமிழ் மக்களுக்கு இல்லாமலே இருக்கின்றது. தமிழ் தேசிய கூட்டமைப்பு தமிழ் மக்களின் பிரச்சினைகளை தொடர்ந்தேச்சையாக தொடர வைத்து கொண்டு அரசியல் செய்கின்றது.

தமிழ் தேசிய கூட்டமைப்பின் அரசியல் எமது மக்களுக்கு பாரிய வெறுப்பை ஏற்படுத்தி இருக்கின்றது. கூட்டமைப்பினரின் வீர வசனங்களை மாறி மாறி கேட்டு கேட்டு தேர்தல்களில் வாக்களித்து அலுத்து போய் நம்பிக்கையீனம் அடைந்து விட்டார்கள். அதுவே கடந்த பொது தேர்தலில் அம்பாறை மாவட்டத்தில் வெளிப்பட்டது. மாற்று கட்சி ஒன்றுக்கு வாக்களிக்க வேண்டிய நிர்ப்பந்தமான சூழலுக்கு உட்பட்டு மாற்றத்தை மேற்கொண்டார்கள்.

முன்னர் தமிழ் தேசிய கூட்டமைப்பினர் தமிழீழ விடுதலை தோற்று விட கூடாது என்று பேசி பேசியே அரசியல் செய்தனர். இப்போது ஐக்கிய நாடுகள் சபையை முன்வைத்து பேசி பேசி அரசியல் செய்கின்றார்கள். கடந்த 30 வருடங்களுக்கு மேலாக தமிழ் மக்களை தொடர்ந்தேச்சையாக கிணற்று தவளைகளாக வைத்திருந்து வந்திருக்கின்றனர்.

கல்முனை வடக்கு பிரதேச செயலகம் தரம் உயர்த்தப்படுகின்ற விடயம் இன்று ஒரு பெரிய பிரச்சினையாக இருக்கின்றது. கல்முனை வடக்கு பிரதேச செயலகம் தரம் உயர்த்தி தரப்பட வேண்டும், ஆலையடிவேம்பு- திருக்கோவில் பிரதேசங்களுக்கான கல்வி வலயம் உருவாக்கி தரப்பட வேண்டும் என்று நான் அன்று மிக முக்கியமாக அப்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவை கோரி இருந்தேன்.கல்வி வலயத்தை உருவாக்கி தந்தேன்.

கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தை தரம் உயர்த்தி பெறுவதற்கு மிக வேகமாக செயற்பட்டேன். கல்முனையில் உள்ள புத்திஜீவிகளையும் சேர்த்து கொண்டு பாராளுமன்றத்துக்கு சென்றோம். அன்றைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவை சந்தித்து பேசினோம். எல்லோரும் ஒரே மேசையில் உட்கார்ந்து பேச்சுவார்த்தை நடத்தினோம். இரண்டு நாட்களுக்குள் பிரதேச செயலகம் தரம் உயர்த்தி தரப்படும் என்கிற உத்தரவாதத்தை உறுதிமொழியாக பெற்று கொண்டு திரும்பினோம்.

அது பாராளுமன்ற தேர்தல் காலம். நானும் அத்தேர்தலில் வேட்பாளராக நின்றிருந்தேன். இந்நிலையில் இரு பாராளுமன்ற உறுப்பினர்கள், ஒரு சில் மாகாண சபை உறுப்பினர்கள் அடங்கலாக தமிழ் பிரதிநிதிகள் குழு ஒன்று சென்று பசில் ராஜபக்ஸவை சந்தித்து இத்தேர்தல் முடிந்த பின்னர் வடக்கு பிரதேச செயலகத்தை தரம் உயர்த்துங்கள், அதற்கு முன்னர் செய்ய வேண்டாம் என்று சொல்லி தடை ஏற்படுத்தி விட்டார்கள்.

யுத்தம் நடந்து முடிந்து விட்டது உண்மை. இதை வைத்துதான் தமிழ் தேசிய கூட்டமைப்பினர் அரசியல் செய்து கொண்டிருக்கின்றனர் என்பதும் எமது மக்களுக்கு மிகவும் நன்றாக தெரிந்த விடயம். இறந்தவர்களை பற்றி பேசுவதை விட்டு விட்டு உயிருடன் இருப்பவர்களை பற்றி பேச வேண்டும். சிறைச்சாலைகளில் உள்ள முன்னாள் போராளிகளை பற்றியே ஐக்கிய நாடுகள் பேசப்பட வேண்டும் என்று நான் நினைக்கின்றேன்.

மிகவும் மோசமான கஷ்டங்களை முன்னாள் போராளிகள் சிறைகளில் நீண்ட காலமாக அனுபவித்து கொண்டிருக்கின்றனர். அங்கு உள்ள அதிகாரிகள், அலுவலர்கள், ஏனைய கைதிகள் போன்றவர்களால் மோசமான பிரச்சினைகளை சந்தித்து கொண்டிருக்கின்றார்கள். எனவே முதலில் இவர்களுக்கான தீர்வு பெற்று கொடுக்கப்பட வேண்டும். உண்மையான தமிழ் உணர்வாளர்களாக நாம் இருந்தால் இதற்கான தயார்ப்படுத்தல்களை நாம் மேற்கொள்ளல் வேண்டும்.

எனவேதான் உயிரோடு இருப்பவர்களை பற்றி யார் எந்த சபையில் பேசுவது? என்று நான் கேட்கின்றேன். முன்னாள் போராளிகளுக்கு ஏனைய கைதிகளுக்கு வழங்கப்படுகின்ற பொது மன்னிப்பு, தண்டனை குறைப்பு, ஏனைய சலுகைகள் போன்றவை கிடைப்பதே இல்லை. அதே போல ஏனைய கைதிகளுக்கு கிடைக்கின்ற உரிமைகளையும் பெற முடியாதவர்களாக உள்ளனர். இவர்கள் விடயத்தில் இறுக்கமான நடைமுறைகளே கைக்கொள்ளப்படுகின்றன. இவர்களுக்கான தீர்வு என்ன?

பிரதமராக மஹிந்த ராஜபக்ஸ 52 நாள் அரசாங்கத்தில் பதவி வகித்தபோது அரசாங்கத்தில் இணையுங்கள், முன்னாள் போராளிகளை விடுவித்து தருகின்றேன் என்று பகிரங்க அழைப்பு விடுத்தார். ஆனால் அந்த அழைப்பை தமிழ் தேசிய கூட்டமைப்பினர் புறம் தள்ளி விட்டார்கள். அவர்கள் அன்று அரசாங்கத்தில் இணைந்திருந்தால் முன்னாள் போராளிகள் இன்று சிறையில் இருந்திருக்க மாட்டார்கள்.

ஒரு இலட்சம் இளையோருக்கான வேலை வாய்ப்பு தமிழ் இளையோர்களுக்கு கிடைப்பது என்பது பெரும்பாலும் எட்டாக்கனியாகவே உள்ளது. மிக சொற்ப அளவில் மாத்திரம் தமிழ் இளையோர்கள் உள்வாங்கப்பட்டு உள்ளனர். ஜனாதிபதி கோதாபய ராஜபக்ஸவுடன் பேசி தமிழ் தேசிய கூட்டமைப்பினர்தான் தமிழ் இளையோர்களுக்கு நியமனங்கள் கணிசமாக கிடைக்காமல் தடை ஏற்படுத்தி இருக்கின்றனரா? என்கிற நியாயமான சந்தேகம் எனக்கு உள்ளது. ஏனென்றால் எமது இளையோர்கள் அரச தொழில் துறைகளில் வேலை பெற்று விட்டால் கிணற்று தவளை நிலையில் இருந்து மீண்டு விடுவார்கள் என்கிற அச்சம் கூட்டமைப்பினருக்கு இருக்கின்றது.

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *