சிரியாவில் சரமாரியாக வான் தாக்குதல்: 57 பேர் பலி, நடாத்தியது இஸ்ரேலா?

145 Views

சிரியாவில் உள்ள இரான் ஆதரவுபெற்ற ஆயுதக் குழுக்களின் நிலைகள் மீது அலை அலையாக விமானத் தாக்குதல் நடந்ததில் குறைந்தது 57 பேர் கொல்லப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த தாக்குதலை இஸ்ரேல் நடத்தியதாக கூறப்படுகிறது.

கடந்த இரு வாரங்களில் சிரியா மீது இத்தகைய தாக்குதல் நடப்பது இது நான்காவது முறை.

இஸ்ரேலிய விமானப்படை, சிரியாவின் கிழக்குப் பகுதியில் இருக்கும் டெய்ர் அல் சோர் & அல்பு கமல் பகுதிகளில் தாக்குதல் நடத்தியதாக சிரியாவின் அரசு செய்தி நிறுவனம் சனா குறிப்பிடுகிறது.

சனா செய்தி முகமை எந்த உயிர் சேதமும் நடந்ததாகக் குறிப்பிடவில்லை. சிரியாவின் படையினர் 14 பேர், கூட்டணிப் படையினர் 43 பேர் இந்த தாக்குதலில் இறந்ததாக இங்கிலாந்தில் இருந்து செயல்படும் ‘சிரியன் அப்சர்வேட்டரி ஃபார் ஹ்யூமன் ரைட்ஸ்’ என்கிற கண்காணிப்பு அமைப்பு கூறுகிறது.

இந்த தாக்குதல் குறித்து இஸ்ரேல் இதுவரை வாய்திறக்கவில்லை. ஆனால், இஸ்ரேல் அடிக்கடி சிரியாவில் இருக்கும் இரான் தொடர்புடைய இலக்குகளை தாக்கிவருகிறது.

2020-ம் ஆண்டில், ரகசிய ராணுவ திட்டங்கள் மூலம், அனைத்து போர் முனைகளையும் சேர்த்து, இஸ்ரேலியப் படை 500-க்கும் மேற்பட்ட இலக்குகளை அழித்திருப்பதாக, இஸ்ரேலிய ஊடகங்களிடம் கடந்த மாதம் கூறினார் இஸ்ரேலிய பாதுகாப்புப் படையின் தலைவர் ஜெனரல் அவிவ் கொசாவி.

இஸ்ரேலிய பாதுகாப்புப் படை நடவடிக்கைகளால், சிரியாவில் இரான் ராணுவ நடவடிக்கைகளின் வேகம் குறைந்திருக்கிறது. ஆனால், இஸ்ரேல் தன் இலக்குகளை அடைய இன்னும் நீண்ட தூரம் செல்ல வேண்டியிருக்கிறது எனவும் ஜெனரல் அவிவ் கொசாவி குறிப்பிட்டார்.

இந்த தாக்குதல் கிரீன்விச் சராசரி நேரப்படி,செவ்வாய்க்கிழமை 23.10-க்கு நடந்ததாகக் குறிப்பிடுகிறது சனா செய்தி முகமை.

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *